முதலமைச்சரிடம் தனி புகார்..! விவரங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும்..! வேட்பாளர்களுக்கு இளைஞர்கள் எச்சரிக்கை..!

புதுக்கோட்டை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நபர்கள் தேர்தலுக்காக செலவழித்த பணத்தை சம்பாதித்து விடலாம் என நினைத்துவிட வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞர்கள் பேனர் வைத்துள்ளனர் . பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலவயல் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், தேர்தலில் வெற்றி பெறுபவர்களிடம் ஆண்டுதோறும் வரவு செலவு கணக்கு கேட்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் நடந்தது கண்டறியப்பட்டால் அவர்களின் விவரங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டமாக நாளை நடைபெறவுள்ளதால் கிராமங்கள் தோறும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. வெளியூரில் வசிக்கக் கூடிய பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக கிராமங்களில் குவிந்து வருகின்றனர்.



பேனர் இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பேனரில், தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் ஊராட்சிக்கு வரும் அரசு பணத்தை எடுத்துவிடலாம் என நினைக்கவேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. வரவு செலவு கணக்குகளை ஊர் மக்கள் முன்னிலையில் வருடந்தோறும் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சமூக வலைதளம் ஊராட்சி பணத்தில் முறைகேடும், ஊழலும் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு காரணமானவர்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கையால் தேர்தல் போட்டியிடுபவர்கள் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர்.



முதல்வர் மேலும், முதலமைச்சரின் தனி புகார் பிரிவு, மாவட்ட ஆட்சியரிடமும் ஊழல் தொடர்பாக புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கவைக்கப்படும் என்றும் ஆலவயல் ஊராட்சி இளைஞர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.